கம்பஹா, கொழும்பு, களுத்துறை, குருணாகல், கேகாலை ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதான தொகுப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக வைரஸ் வேகமாக பரவி வரும் 5 மாவட்டங்கள் தொடர்பாக அரசாங்கம் துரிதமாக தீர்மானத்தை எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த மாவட்டங்களின் ஊடாக நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இருப்பதாகவும் இந்த மாவட்டங்களின் எல்லைகள் தொடர்பாக உடனடியாக தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த தீர்மானத்தை தொடர்ந்தும் ஒத்திவைத்தால், பேலியகொடயில் ஏற்பட்ட கொத்தணி போல் நாடு முழுவதும் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.