கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாண சுகாதார சேவைகள் துறை தெரிவித்துள்ளது.
பேலியகொட மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய கொரோனா வைரஸ் நோயாளிகள் கிழக்கின் சில பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாஹரன் இதனை தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை, கல்முனை, நிந்தவூர், பொத்துவில் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் கொரோனா வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கிழக்கில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 11 பேர் வாழைச்சேனை மற்றும் 6 பேர் திருகோணமலையை சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் வைரஸ் பரவாமல் இருக்க கடுமையான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கின் சில பகுதிகளில் விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பிற பொது நிகழ்வுகள் தடை செய்யப்பட்டுள்ளன.
மேலும் சில பகுதிகளில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகங்களும் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி உடன் அமுலுக்கு வரும் வகையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.