கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தீ அணைப்பு சேவைகள் அனைத்தும் வழமை போன்று
செயற்படுகிறது. அத்தியாவசிய சேவையான தீ அணைப்பு சேவையினை இடைநிறுத்த முடியாது
என்றும் கிளிநொச்சி பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ந.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தீ அணைப்பு சேவைகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தற்காலிக
பணியாளர்களை உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பணியில் ஈடுபட அனுமதி மறுத்த காரணத்தினால்
இச் சேவைகள் இடை நிறுத்தப்பட்டதாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன்
ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டமை தொடர்பில் உள்ளுராட்சி உதவி ஆணையாளரை தொடர்பு கொண்டு
வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தீ அணைப்பு சேவை ஒரு அத்தியாவசிய சேவை. அதனை என்னால் நிறுத்த முடியாது.
அது முழுக்க முழுக்க சபை கட்டுப்பாட்டில் உள்ள விடயம். ஆனால் எனது
நடவடிக்கையின் காரணமாக நிறுத்தப்பட்டதாக வெளிவந்த செய்தி உண்மைக்கு
புறம்பானது. திணைக்கள நடை முறைகள் சட்டத்திட்டங்களுக்கு மாறாக ஒரு
பணியாளாருக்கு 140 மணித்தியாலயங்கள் மேலதிக நேரக் கடமைக் கொடுப்பனவுக்கு
அனுமதிக்குமாறு தவிசாளர் கோரியிருந்தார். அதற்கு என்னால் அனுமதி வழங்க முடியாது.
எனது வரையறுக்குட்பட்டு 40 மணித்தியாலயங்கள் மேலதிக நேரக்
கொடுப்பனவுக்கே அனுமதி வழங்க முடியும். அதற்கு மேற்பட்ட மேலதிக நேரக்
கொடுப்பனவுக்கு உரிய திணைக்கள நடைமுறைகளுக்கு அமைவாக பிரதம செயலாளரின் அனுமதியே
பெற முடியும்.
சட்டத்திற்கு அமைவாக 140 மணித்தியாலய மேலதிக நேரக் கொடுப்பனவுக்கு
என்னால் அனுமதி வழங்கப்படவில்லை என்ற காரணத்திற்காக தீ அணைப்புச்
சேவைகள் அனைத்து இடைநிறுத்தப்பட்டதாக செய்தி வெளியிட்டு எனது
பிரத்தியேக தொலைபேசி இலக்கத்தையும் வெளியிட்டமை முதிர்ச்சியற்ற செயலாகும்.
அத்தோடு தற்போது தீ அணைப்பு பிரிவில் உள்ள அனைத்து பணியாளர்களும் கரைச்சி பிரதேச சபையின் நிரந்த பணியாளர்கள். அவர்கள் வேறு
பணிகளிலிருந்து தீ அணைப்பு பிரிவுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளனர்.



















