தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார மலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ தலைமையில் நேற்று (27) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, எந்தவொரு வருமானமும் இன்றி வாழும் குடும்பங்களுக்கான நிவாரணத்தை வழங்கவும் நாட்டின் தற்போதைய நிலையில் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்களுக்காக இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்குவதற்கான விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொருளாதார மலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக வாரம் முழுவதிலும் முழுமையாக முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் 5000 ரூபா (கொரோனா தாக்கத்தால் முதன் முறையாக ஊடரங்கு பிறப்பித்த போது குடும்பங்களுக்கும் தலா 5000 ரூபாய் பணம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது) நிவாரணம் வழங்கவும், மேலும், மின்சாரம், நீர், எரிபொருள், எரிவாயு, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செயலணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கவும், வறுமையில் வாடும் மக்களின் நிலைமையினையும் கருத்தில் கொண்டு இந்த திட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.