இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதர் அஷ்ரப் ஹைதாரி கூறிய கருத்துக்களை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது.
தலிபான் தீவிரவாதிகள் தயாரிக்கும் போதைவஸ்துகள் பாகிஸ்தான் வழியாக இலங்கைக்குள் வருகின்றன என்று ஆப்கானிஸ்தானிய தூதுவர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.
எனினும் இதற்கு பதிலளித்த கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இந்த அறிக்கை ஒரு நட்பு நாட்டின் குடிமக்களை தவறாக வழிநடத்தும் கருத்தாகும் என்று குறிப்பிட்டுள்ளது.
சந்தேகத்திற்கு இடமின்றி, பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் பாகிஸ்தான் ஒரு முன்னணி நாடாக இருந்து வருகிறது.
பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தானின் முக்கிய பங்கு உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பான புகலிடங்களைக் கொண்ட தாலிபான் பயங்கரவாதிகளின் செயல்கள் காரணமாகவே பாகிஸ்தானே தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.
அந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக பழங்குடிப் பகுதிகளிலும் பலூசிஸ்தானிலும் அழிவை ஏற்படுத்தி வருகின்றனர் என்று பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
நேட்டோ அறிக்கையின்படி ஆப்கானிஸ்தான் உலகின் மிகப்பெரிய போதைவஸ்து உற்பத்தி இடமாகும் என்று பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரம் சுட்டிக்காட்டியுள்ளது.