கூடுமானவரை இரண்டாவது தேசிய ஊரடங்கை தவிர்க்கவே விரும்புவதாக கூறிக்கொண்டிருந்த பிரித்தானிய பிரதமர், அடுத்த வாரம் தேசிய ஊரடங்கை அறிவிக்க இருப்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பிரித்தானியா தாங்கள் கணித்ததைவிட மிக மோசமான நிலைமைக்கு செல்லலாம் என இரண்டு வாரங்களுக்கு முன்பே பிரதமரின் ஆலோசகர்கள் அமைச்சர்களை எச்சரித்துள்ளார்கள்.
அரசு அறிவியலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் அவர்கள் அப்படி எச்சரித்ததைக் காட்டும் ஆவணம் நேற்றிரவு வெளியாகியுள்ளது.
அக்டோபர் 14 என திகதியிடப்பட்ட அந்த ஆவணத்தில், நாம் எதிர்பார்த்ததைவிட கொரோனா தொற்றின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உடனடியாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் கொரோனா பரவல் பயங்கரமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று இது குறித்து பேசிய ஆலோசகர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை மக்கள் கொண்டாடுவதற்கு இன்னமும் வாய்ப்பு இருப்பதாக தாங்கள் நம்புவதாக தெரிவித்துள்ளார்கள்.
குறைந்தது ஒரு மாதத்திற்காவது ஊரடங்கை அறிவித்து, உணவகங்கள், மதுபான விடுதிகள், அத்தியாவசியமற்ற கடைகள் முதலானவற்றை மூடினால் அதற்கு வாய்ப்புள்ளது என்கிறார்கள் அவர்கள்.
நிலைமை இப்படியே போனால், ஒரு மாதத்திற்குள் நாளொன்றிற்கு பிரித்தானியாவில் 1,000 பேர் வரை கொரோனாவால் உயிரிழக்கும் நிலை ஏற்படலாம் என்றும், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 85,000ஐ தாண்ட நேரிடலாம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
நேற்று ஒரு நாளில் மட்டுமே 274 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள். 15 நாட்களுக்கு முன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 136ஆக இருந்தது கவனிக்கத்தக்கது.
அத்துடன், கடந்த 15 நாட்களில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் இரட்டிப்பாகியுள்ளது.
இப்படியே அது 15 நாட்களுக்கொருமுறை இரட்டிப்பாகிக்கொண்டே போனால், நவம்பர் மத்தியில் 20,000 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை உருவாகலாம், இரண்டு வாரங்களுக்கு முன் அறிவியல் ஆலோசகர்கள் வெளியிட்ட ஆவணங்கள், இங்கிலாந்தில் மட்டுமே நாளொன்றிற்கு 74,000 பேர் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாக நேரிடலாம் என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆக, திடீரென பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த வாரத்தில் தேசியஊரடங்கை அறிவிக்க இருப்பதன் பின்னணி இதுதான் என கருதப்படுகிறது!



















