இலங்கையில் உள்ள ஐநா அலுவலகம் பிரதமரை பிரதம விருந்தினராக அழைத்தமை
தவறானது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான
செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கையில் உள்ள ஐநா அலுவலகம் இணையவழி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் பிரதமர் மகிந்த
ராஜபக்ஸ பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார். ஆனால் மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற பல்வேறு மனித உரிமைகள் மீறல் தொடரிபில் ஐநாவிடம் முறையிட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் பொறுப்பு கூற வேண்டிய அவரையே பிரதம விருந்தினராக அழைத்தமைதொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வினவிய போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,
ஐநாவின் தீர்மானங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே
அனைவரின் நிலைப்பாடாகும். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்க செயலரும் அதனை வெளிப்படுத்தி சென்றிருக்கின்றார். இந்த நிலையில் விசாரணை செய்யப்பட வேண்டிய அல்லது அது தொடர்பில் கேள்விக்குட்படுத்த வேண்டிய ஒருவரை பிரதம விருந்தினராக அழைத்தமை ஏற்புடையதாக இருக்காது என்பது எனது கருத்து.
மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டியவர்களின் பெயர்பட்டியலில் மகிந்த ராஜபக்ஸவின் பெயரும் இருக்கிறது. அந்த வகையில் ஐநா
கொழும்பு அலுவலகம் அவரை பிரதம விருந்தினராக அழைத்தது தமிழ் மக்களுக்கு
ஐநா சபை மீது தவறான பார்வையை ஏற்படுத்தும். ஐநாவின் தீர்மானத்திலிருந்து
விலக போவதாக இலங்கை அரசு அறிவித்திருக்கும் நிலையில் இச் செயற்பாடு முழு
ஐநா சபையையே தமிழ் மக்கள் சந்தேகின்ற நிலையினை ஏற்படுத்தும். ஆகவே இந்த
விடயததில் ஐநா தமிழ் மக்கள் விடயத்தில் சரியாக நடந்துகொள்ளுமா என்ற
சந்தேகத்தை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்-
இது மிக மிக பொருத்தமற்ற ஒரு நிலைப்பாடு. இலங்கையில் நடைபெற்றதாக
சொல்லப்படுகின்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஐநா செயலாளர் நாயகம்
நியமித்த மூவர் அடங்கிய குழுவின் அறிக்கை, ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு
வெளியிட்ட விசேட அறிக்கை, அதனைவிட இலங்கையில் ஐநா தவறுவிட்டதாக
தெரிவிக்கும் அறிக்கை இவை எல்லாவற்றிலும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி
காலத்தில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் சர்வதேச
மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதாகவும் பல விதமான யுத்த குற்றச்
சாட்டுகள் இடம்பெற்றதாகவும், ஐநாவே தெரிவித்துள்ள நிலையில் இதற்கு
பொறுப்பு கூறவேண்டிய ஒருவரை ஐநா தன்னுடைய நிகழ்வுக்கு பிரதம
விருந்தினராக அழைப்பது மிக மிக தவறான ஒன்றாகும்.