கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்து விட்டதாகவும், அது 90 சதவிகிதம் செயல்திறன் உடையதாக இருப்பதாகவும் வெளியான ஒரு செய்தி உலகையே திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.
அந்த தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க நிறுவனமான Pfizer நிறுவனத்தின் பெயர் செய்திகளில் பரபரப்பாக அடிபட்டாலும், அது அமெரிக்க நிறுவனம் மட்டுமே கண்டுபிடித்த தடுப்பூசி அல்ல.
அமெரிக்க நிறுவனமான Pfizer, மற்றும் ஜேர்மன் நிறுவனமான BioNTech இரண்டும் இணைந்துதான் அந்த தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளன. சரி, இனி விடயத்திற்கு வருவோம்…
BioNTech நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பின் பின்னணியில் இருப்பது ஒரு தம்பதி.
மருத்துவர்களான Ugur Sahin (55)மற்றும் Oezlem Tuereci (53)என்ற அந்த தம்பதி, மருத்துவ ஆராய்ச்சியின் மேல் தீராத காதல் கொண்ட ஒரு தம்பதி.
அவர்களை ஆச்சரிய தம்பதி என குறிப்பிட்டுள்ளதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். முதலாவதாக, தங்கள் திருமண நாளில் கூட, ஆய்வகத்துக்கு வந்து பணி செய்ய அவர்கள் இருவரும் தயங்கவில்லையாம்.
இரண்டாவதாக, எளிய பின்னணியிலிருந்து வந்தவரான Sahin, இன்னமும் தன் கடந்த கால வாழ்க்கையை மறக்காமல் எளிமையாக தனது சைக்கிளிலேயே சில நேரங்களில் அலுவலகத்திற்கு வந்துவிடுவதுண்டாம்.
இரண்டு பல மில்லியன் மதிப்புடைய நிறுவனங்களுக்கு சொந்தக்காரரான ஒருவர், சாதாரணமாக ஜீன்ஸ் அணிந்து சைக்கிளில் பணிக்கு வருவதை எங்காவது கற்பனை செய்து பார்க்கமுடியுமா? அத்துடன், இன்று என்னுடைய நிறுவனத்தில் பங்கு என்ன விலைக்கு போகிறது என்றுகூட அவர் பார்ப்பதில்லையாம், அதைவிட, அறிவியல் பூர்வமான ஆய்வுகள் குறித்து படிப்பதில்தான் ஆர்வம் காட்டுவாராம் Sahin.
தம்பதியர் இருவரும் துருக்கியை பின்னணியாக கொண்டவர்கள், இன்னமும் தம்பதியர் புற்றுநோய், காசநோய் ஆய்வுகளில் கவனம் செலுத்திவரும் நிலையில், ஜேர்மனியின் முதல் 100 செல்வந்தர்களில் ஒருவரான Sahin எளிமையை மறக்கவில்லை என்பது ஆச்சரியமான செய்திதானே!