அர்மீனியாவின் வான் எல்லைக்குள் பறந்து கொண்டிருந்த ரஷ்ய நாட்டின் இராணுவ ஹெலிகொப்டரை அசர்பைஜான் இராணுவம் சுட்டு வீழ்த்தியது. இந்த சம்பவத்திற்கு ரஷ்யாவிடம் உடனடியாக அசர்பைஜான் மன்னிப்பு கோரியது.
அர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற மாகாணம் அமைந்துள்ளது.
இந்த மாகாணம் அசர்பைஜானின் பகுதி என சர்வதேச நாடுகளால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாகாணத்தில் பெரும்பான்மையானோர் அர்மீனிய ஆதரவாளர்களே உள்ளனர்.
1994ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் இந்த மாகாணத்தின் பெரும் பகுதியை அர்மீனியா கைப்பற்றியது.
அன்றில் இருந்து நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக அர்மீனியா – அசர்பைஜான் இடையே மோதல்கள் அரங்கேறி வருகிறது.
பல ஆண்டுகளாக தணிந்திருந்த பதற்றம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் தீவிரமடையத் தொடங்கியது.
தங்கள் வசம் இருந்த நகோர்னோ – கராபத் மாகாணத்தை முழுவதும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அசர்பைஜான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு அர்மீனிய ஆதரவு படையினர் பதில் தாக்குதல் கொடுத்து வருகின்றனர்.
இச்சண்டையில் அர்மீனியாவுக்கு ரஷ்யா ஆதரவு அளித்தபோதும் நேரடியாக களத்தில் இறங்கவில்லை. இரு தரப்பிற்கும் இடையே அமைதியை ஏற்படுத்தவே ரஷ்யா முயற்சித்து வந்தது.
இதற்கிடையில், ரஷ்ய இராணுவத்திற்கு சொந்தமான மிக்-24 ரக இராணுவ ஹெலிகொப்டர் நேற்று அசர்பைஜான் வான்பரப்பிற்கு அருகே அர்மீனியாவின் வான்பரப்பிற்குள் பறந்து கொண்டிருந்தது.
யுத்தம் உச்சத்தில் இருந்த நேரம் என்பதால் ஹெலிகொப்டர் அர்மீனியாவுக்கு சொந்தமானது என நினைத்த அசர்பைஜான் பாதுகாப்பு படையினர் அந்த ரஷ்ய ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தினர்.
இந்த தாக்குதலில் ரஷ்ய ஹெலிகொப்டரில் பயணம் செய்த 2 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 3 வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ரஷ்யாவுக்கும் அசர்பைஜானுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.
இந்நிலையில், அர்மீனிய வான் எல்லைக்குள் பறந்துகொண்டிருந்த ரஷ்ய ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியதற்கு ரஷ்யாவிடம் உடனடியாகவே அசர்பைஜான் பகிரங்க மன்னிப்புக் கேட்டுள்ளது.
போர் பதற்றத்தில் இத்தாக்குதல் தவறுதலாக நடந்து விட்டதாக அசர்பைஜான் ரஷ்யாவிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.