கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இலங்கையை விட ஒரு புள்ளியைப் பெற்றிருக்குமாயின் அது சீனா மாத்திரமே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹங்குராங்கெத்த பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில்,
முதலாவது சுற்றில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நாங்கள் உலகில் முதலாம், இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டோம்.
உலகில் அப்படி புள்ளிகளை வழங்கும் போது இலங்கையை விட ஒரு புள்ளியை அதிகமாகச் சீனா மாத்திரமே பெற்றுக்கொண்டது. சீனாவுக்கு அடுத்ததாக இலங்கையே இருந்தது.
உலகில் உள்ள ஏனைய அனைத்து நாடுகளும் எமக்கு கீழேயே இருந்தன. முழு உலகமும் தோல்வியடையும் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தூரநோக்கு பார்வை காரணமாக நாம் வெற்றியின் உச்சத்தில் இருந்தோம்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்பட்டது. சிறிது சிறிதாக பாரதூரமாகப் பரவியது. தற்போது அது முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நான் கூற விரும்புகிறேன்.
மக்கள் மீது சுமைகளை ஏற்றாது நாட்டை நிர்வகித்துச் செல்லும் அளவுக்கு ஜனாதிபதி வலுவாக இருக்கின்றார்.
வரவு செலவுத்திட்டம் வரிகளை அறவிடும் வரவு செலவுத் திட்டமாக இருக்க வேண்டும். எனினும் பிரதமர் மகிந்த ராஜபக்ச வரிகள் இல்லாத வரவு செலவுத்திட்டத்தை கொண்டு வரவுள்ளார்.
இதனால் தோல்வியடைந்தது நாங்கள் அல்ல ரணில் விக்ரமசிங்கவே என்பதைக் கூற விரும்புகிறேன். ஐக்கிய தேசியக் கட்சியே தோல்வியடைந்தது.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட தெரிவாக முடியாமல் போனது. தேசிய பட்டியலில் ஒரு ஆசனம் கிடைத்தது.
அந்த உறுப்பினரைத் தெரிவு செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.



















