கடந்த 14 நாட்களில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் மருத்துவர் ஹரித அலுத்கே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் 19 பரவலானது கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றினால் 17 ஆயிரத்து 287 பேர் பீடிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 11 ஆயிரத்து 495 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 5 ஆயிரத்து 734 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் 3 இயந்திரங்களை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சுதந்த லியனகே இதனை தெரிவித்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு ஆயிரம் பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள 4 சந்தேகநபர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
கைக்குண்டை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் களுத்துறை தெற்கு காவல்துறையினர் மற்றும் கட்டுகுறுந்த விசேட அதிரப்படையின் அதிகாரிகளால் கடந்த 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு நகரமே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி என்றும், கொழும்பில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் பல முறை அறிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.


















