நாடு எதிர்கொள்ளும் கடன் நெருக்கடிகளை சமாளிக்கவோ, நாடாக மீளவோ இந்த வரவு செலவு திட்டமானது கைகொடுக்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், மிகவும் பலவீனமான வரவு செலவு திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ளது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அரசாங்கம் முன்வைத்துள்ள 2021ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை முன்வைத்த கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
அரசாங்கம் முன்வைத்துள்ள 2021ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது அரசாங்கத்தின் மோசமான நிலைமைகளை வெளிப்படுத்துகின்றது.
நாடாக பாரிய கடன் நெருக்கடியில் உள்ள நிலையில், எமது சர்வதேச கடன்கள் எல்லை மீறிய ஒன்றாக காணப்படுகின்ற நிலையில் அதனை சமாளிக்கும் வரவு செலவு திட்டமாக அல்லாது மேலும் கடன்களை வாங்கும் வரவு செலவு திட்டமாகவே இது அமைந்துள்ளது.
பிரதமர் இன்றைய தினம் தனது வரவு – செலவு திட்ட உரையினை நிறைவு செய்யும் வேளையில் நாட்டினை அபிவிருத்தியின் பக்கம் கொண்டு செல்லும், துரிதமாக அபிவிருத்தியடையச் செய்யும் நோக்கத்தை கொண்டுள்ளோம் எனக் கூறினார்,
ஆனால் இப்போதுள்ள நிலையில் நாட்டை அபிவிருத்து செய்வதை விடவும் கடன்களில் இருந்து மீளவே போராட வேண்டியுள்ளது என்பதே உண்மையாகும்.
எனவே மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும், மக்கள் மீது சுமைகளை இறக்கும் வரவு செலவு திட்டமொன்றை இன்று அரசாங்கம் முன்வைத்துள்ளது என அவர் கூறியுள்ளார்.
நாடாக இன்று பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ள நிலையில் அவற்றை எதிர்கொள்ள, சவால்களை வெற்றிகொள்ள இந்த வரவுசெலவு திட்டம் இயலுமான ஒன்றாக இல்லை என்பதே தமிழ் தேசிய கூட்டமைபின் நிலைப்பாடு எனவும் அவர் கூறினார்.