இலங்கையை பாரிய கடன் பொறிக்குள் தள்ளும் வரவு செலவு திட்டத்தையே அரசாங்கம் முன்வைத்துள்ளது. ஏற்கனவே நாடு 13 ட்ரில்லியன் ரூபா கடன்களில் உள்ள எமக்கு மேலும் ஐந்து ட்ரில்லியன் சேர்கின்றது என ஜே.வி.பி குற்றம் சுமத்துகின்றது.
அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட நிலையில் இந்த வரவு செலவு திட்டம் குறித்து ஜே.வி.பியின் நிலைப்பாட்டை கூறும் போதே விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவு திட்டமானது சகல வகையிலும் கவலையளிக்கக்கூடிய வரவு செலவு திட்டமாக மாறியுள்ளது.
நாடாக முகங்கொடுக்க நேர்ந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கும், கொவிட் -19 வைரஸ் நிலைமைகளில் நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுக்கக்கூடிய விதத்தில் இந்த வரவு செலவு திட்டம் அமையவில்லை.
வழமை போன்றே கடன்களை பெற்றுக்கொண்டு செலவுசெய்யும் வரவு செலவுத்திட்டமாகவே இது அமைந்துள்ளது.
இந்த வரவு செலவு திட்டத்திலும் மூன்று பில்லியன் சர்வதேச கடன் எடுத்தே இந்த வரவு செலவு திட்டத்தை நிரப்பியுள்ளனர். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மாத்திரம் எமது கடன்களில் ஐந்தாயிரம் பில்லியன் சேர்ந்துள்ளது.
ஏற்கனவே இருந்த 13 ட்ரில்லியன் கடன் தொகையுடன் மேலும் ஐந்து ட்ரில்லியன் சேர்கின்றது. எனவே எமது எதிர்காலம் கடன்களில் இறுகிக்கொண்டுள்ளது.
இந்த வரவு செலவு திட்டமானது மக்களை கட்டியெழுப்புவதற்கு போதுமான வரவுசெலவு திட்டமாக அமையவில்லை, நாட்டை மேலும் கடன் சுமைக்குள் தள்ளும் வரவு செலவு திட்டமாகவே இம்முறையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் செலவுகளை கடன் பெற்று கையால வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது, எனவே இது பலவீனமான ஒரு வரவு செலவு திட்டம் என அவர் கூறினார்.