நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க தமிழ் கட்சிகள் ஆதரவளித்தாலும் அவர்கள் வடக்கு மக்களுக்காக எந்தவொரு வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை.
மாறாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திலே வடக்கிற்குத் தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதல்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொவிட் – 19 வைரஸ் பரவல், யுத்தம், எரிபொருள் பிரச்சினை எதுவுமின்றியே 2015 இல் நாட்டை நல்லாட்சி அரசுக்கு மஹிந்த ராஜபக்ஷ கையளித்தார்.
ஆனால் ஆகஸ்டில் நடந்த தேர்தலில் 104 பாராளுமன்ற உறுப்பினர்களையே அவர்களால் பெறமுடிந்தது. ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றத் தேர்தலை வென்றார். அப்படியானால் யார் தோல்வியடைந்தவர்கள்? நாங்களா? அல்லது அவர்களா?
2005 இலும் இதே போன்ற வீழ்ச்சியடைந்த நாட்டையே மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றார். முடிவிற்குக் கொண்டுவரமுடியாது எனத் தெரிவித்த யுத்தத்தை வெற்றிகொண்டு, நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம்.
நெடுஞ்சாலைகளை உருவாக்கினோம். இன்னும் சில ஆண்டுகளில் உலகில் முன்னேற்றகரமான நாடாக எமது நாடு அபிவிருத்தி காணும்.
மேலும் யுத்தம் வெற்றிகாெள்ளப்பட்ட பின்னர் வடக்கை அபிவிருத்திசெய்ய வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம். பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அங்கு ஏற்படுத்தினோம்.
வடக்கு தமிழ் மக்களுக்கு நாங்கள் செய்த அபிவிருத்தியை ஒருபக்கம் வைத்தாலும் பாடசாலை செல்லும் மாணவர்களில் கழுத்தில் இடப்பட்ட சயனைட் குப்பியை அகற்றி, ரி56 துப்பாக்கிக்கிக்கு பதிலாக அவர்களுக்குப் பேனையை வழங்கியது யார்? யுத்த அச்சமின்றி நிம்மதியாக வாழும் சூழலை யார் ஏற்படுத்தினார்கள் எனக் கேட்கின்றோம்.
ஆனால் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடம் ஏற தமிழ்க் கட்சிகள் ஆதரவளித்தபோதும் அந்த அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது. வடக்கில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அபிவிருத்தி என்ன என்று கேட்கின்றோம்.
அதேபோன்று தோட்டத்தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு குறித்து வேலுகுமார் பேசினார். 2015 தேர்தலில் தமிழ் மக்கள் 80-90 சதவீதம் நல்லாட்சி அரசாங்கத்திற்கே வாக்களித்தார்கள்.
ஆனால் நல்லாட்சி அரசினால் தமிழ் மக்களுக்குக் கிடைத்த ஒரு சலுகையைக் கூறமுடியுமா? 5 வருடத்தில் என்ன கிடைத்தது? தொழில் வாய்ப்பேனும் வழங்கப்பட்டதா?
எனவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வரவு செலவுத் திட்டத்தில் பிரேரிக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் நாங்கள் நிறைவேற்றுவோம். அதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் என்றார்.