நாட்டிலுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வினை வழங்கினால், வெளிநாடுகளில் உள்ள தமிழ் முதலீட்டாளர்கள் மீண்டும் நாட்டிற்கு வந்து இங்கு முதலிடுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “83 கலவரத்தினைத் தொடர்ந்து நாட்டை விட்டுச்சென்றவர்கள் நாட்டுக்கு திரும்பிவர வேண்டுமாயின் முதலில் அவர்களுக்கு இங்கு வாழ்வதற்கு முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.
என்னிடமும் பல்வேறு திட்டங்கள் இருகின்றன. அவற்றினை செயற்படுத்துவது குறித்து நாங்கள் பேசுவோம். அவற்றினை செயற்படுத்துவோம். நானும் பரிந்துரைகளை முன்வைக்க தயாராகவே உள்ளேன்.
உண்மையாக இங்கு இருக்கின்றவர்கள் ஜனாதிபதி, தோல்வியடைந்துள்ளார். தோல்வியடையவில்லை என பேசுகின்றார்கள். ஜனாதிபதி இன்னும் தோல்வியடையவில்லை.
ஏனென்றால் ஒரு வருடம் தான் கடந்துள்ளது. இன்னும் 4வருடங்கள் இருக்கின்றன. ஆனால், தற்போதைய நிலைமை தொடர்ந்து நீடித்தால் ஜனாதிபதி நிச்சயம் தோல்வியடைவார்.
மட்டக்களப்பில் உள்ள அமைச்சர் ஒருவர், மண் அகழ்வுக்கு அனுமதி வழங்கியுள்ளார். மஹிந்த அமரவீர மட்டக்களப்புக்கு வருகை தந்தபோது, அவரை சந்தித்து இதுபற்றி கூறினேன். மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தினேன்.
ஆனால் புதிதாக 32 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒருஅனுமதிக்கு 5 இலட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளனர். அதாவது மாதம் ஒன்றுக்கு ஒரு அனுமதிக்கு2 இலட்சம் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஒரு வருடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
22 கிலோமீற்றர் உள்ள ஆற்றில் விரும்பிய எந்த பகுதியிலும் மணல் அகழ்வில் ஈடுபட முடியும். மணல் அகழ்வில் ஈடுபடுவது பிரச்சினை இல்லை.
குறித்த பகுதி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களுக்கு உரித்தான பகுதி. இங்கு ஒருவருக்கு 2 இலட்சத்தை கொடுத்து அவரிடம் மண்ணினை பெறுவதற்கு என்ன அவசியம் இருக்கின்றது.
அதாவது வருடம் ஒன்றுக்கு 10 இலட்சத்தை பெறுவதற்காகவா இவர்கள்நாடாளுமன்றம் வருகின்றார்கள் என கேட்க விரும்புகின்றேன்.
அத்துடன், ஒரு இலட்சம் வேலை வாய்ப்பினை வழங்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கமைய மட்டக்களப்பில் 250 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்கு சிலரிடம் ஒரு இலட்சம் வரை பணத்தினைப் பெற்றுக்கொண்டே வேலையினை வழங்கியுள்ளனர். யார் இதனை கூறியுள்ளது என பார்த்தால் பிரதமரின் கிழக்குமாகாண இணைப்புச் செயலாளராகவுள்ள கருணா அம்மானே இதனைக் கூறியுள்ளார்.
இந்த விடயங்களை நன்றாக தேடிப்பாருங்கள். இத்தகையவர்களுடன் இணைந்து சேவையாற்ற வேண்டாம் என ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.