மக்கள் ஆணையுடன் ஜெனீவா தீர்மானத்திலிருந்து வெளியேற நடவடிக்கை எடுப்போம் என்பதை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோமென அமைச்சர் வாசுதேவ நாணயகார தெரிவித்தார்
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை, 2021 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
ஐரோப்பிய ஒன்றியம் எமக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. எமது இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டாமென அவர்கள் கூறுகின்றனர்.
அவர்களா எமக்கான வெளிநாட்டு கையிருப்பை தருகின்றனர். இதே விடயத்தை சர்வதேச நாணய நிதியம் எப்போதுமே கூறிக்கொண்டிருந்தது.
நாட்டில் இறக்குமதியை அளவுக்கதிகமாக இடமளித்து எமக்கு தேவையானவற்றை இறக்குமதி செய்யக்கூறியும் அதற்காக தேவையான கடன்களை தாம் தருவதாக கூறினர்.
இதுதான் கடந்த ஆட்சியில் இடம்பெற்றது, இதனால் தான் ரூபாவின் பெறுமதி மோசமான விதத்தில் வீழ்ச்சி கண்டது. இதனால் வட்டி வீதம் அதிகரித்தது. இதனையெல்லாம் குறைக்க வேண்டும் என்றும் ரூபாவின் பெறுமதியை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் நாம் இறக்குமதியை கட்டுப்படுத்தியுள்ளோம்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கேள்விகளுக்கு எமது மக்கள் கடந்த தேர்தலில் பதில் கூறியுள்ளனர், மக்கள் ஆணையுடன் நாம் இதற்கான பதிலை கூறியுள்ளோம்.
இதே மக்கள் ஆணையுடன் தான் அமெரிக்கா கொண்டுவந்த ஜெனீவா தீர்மானத்திலிருந்து வெளியேறினோம். எமக்கு கிடைத்த மக்கள் ஆணையை கொண்டே நாம் அவ்வாறான தீர்மானம் எடுத்தோம். ஆகவே எமக்குள்ள ஆணையின் பிரகாரம் இந்த தீர்மானத்திலிருந்து வெளியேறவும், இந்த நாட்டின் நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளையும், இந்த நாட்டின் நியாயத்தை கடைப்பிடிக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்பதை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம் என கூறியுள்ளார்.