இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக பழகி, அவர்களை ஆபாசமான வீடியோ மற்றும் போட்டோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவிலை சேர்ந்த காசி கைதாகிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
மேலும், பெண்களுடன் தனிமையில் இருப்பதை நண்பர்கள் உதவியுடன் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் அவரது லேப்டாப் ஒன்றில் இருந்து நூற்றுக்கணக்கான வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை போலீசார் கைப்பற்றினர்.
அதில் பல வீடியோக்கள் அப்பெண்களுக்கு தெரியாமல் ரகசியமாக எடுத்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, 80-க்கும் மேற்பட்ட பெண்களை காசி ஏமாற்றியிருக்கலாம் என்று போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வழக்கின் தன்மையை கொண்டு கடந்த மே மாதம் காசி மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், காசியின் ரகசிய லேப்டப்பில்தான் அனைத்து வீடியோக்களும் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் தேடிய நிலையில் ரகசிய லேப்டாப் ஒரு கோழிப்பண்ணையில் இருந்து மீட்கப்பட்டது.
ஆனால் மீட்கப்பட்ட லேப்டாப்பில் இருந்த வீடியோ ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தன.
இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் காசியின் லேப்டாப்பில் இருந்த வீடியோ ஆதாரங்களை அவரது தந்தை தங்கபாண்டியன் அழித்தது தெரியவந்தது. இதனால் காசியின் தந்தை கைது செய்யப்பட்டார்.
இதன்பின்னர், மகனை காப்பாற்ற வழக்கின் வீடியோ ஆதாரங்களை அழித்ததற்காக காசியின் தந்தை தங்கபாண்டியன் மீது 4 வழக்குகளை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர்.
மேலும் லேப்டாப்பில் அழிக்கப்பட்ட வீடியோக்களை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீட்ட போலீசார், காசியின் தந்தையிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.