தெற்கை சிங்கமாக்கியதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் நாய்கள் வடக்கில் சிணுங்குகின்றன. அவற்றை முடிக்க வேண்டும். தடையை மீறி எம்.ஏ.சுமந்திரன் மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்த எப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்.
ராஜலீரிய, நவல வீதியில் உள்ள ஷன்னாரி சதர்மராஜிக விகாரையில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஞானசர தேரர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் மாவீரர்தின கொண்டாட்டங்களுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி சுமந்திரன் நீதிமன்ற உத்தரவுகளை மீறுகிறார். சுமந்திரன் நடித்துள்ளார்.
அவர் ஒரு சட்டத்தரணி. நாடாளுமன்ற உறுப்பினர். நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றபோது, பிரிவினைவாதம் அல்லது பயங்கரவாதத்தில் ஈடுபடமாட்டேன் என்றும், அத்தகைய செயலுக்கு ஆதரவளிக்க மாட்டேன் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டத்தரணியாக அவர் முன்வைக்கும் உதாரணம் இதுவாக இருந்தால், காட்டில் வசிக்கும் உணர்ச்சிவசப்பட்ட, தமிழ் இளைஞர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே வைக்க ஆசைப்பட மாட்டார்கள் அல்லவா? எனவே, சுமந்திரன் மீதான சட்டத்தை அமல்படுத்துமாறு உடனடியாக அரசிடம் கேட்டுக்கொள்கிறோம்.
சுமந்திரன்களின் மரணப் பொறிக்கு இரையாக வேண்டாம் என்று எங்கள் சக தமிழ் இந்துக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்த பரிதாபகரமான போரினால் தமிழ் சமூகம் வீழ்ச்சியடைந்தது. அவர்களுடன் நாங்கள் ஒரு நல்ல உறவை வளர்த்துக் கொண்டிருக்கும் ஒரு நேரத்தில், சுமந்திரனைப் போன்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் இன்னும் ஆயுதங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையில் இருக்கும் கறுப்பு சிந்தனை கொண்டவர்களுக்கு ஊக்கமளிக்கின்றனர். எனவே, உடனடியாக சட்டத்தை அமல்படுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். அரசாங்கம் எதிர்காலத்தில் இதை எப்படி கையாள போகிற என்பதை நாங்கள் கவனித்து வருகிறோம் என்றார்.