ஹோட்டலில் வாங்கிய சாம்பாரில் எலிகுஞ்சு இறந்து கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார்.
கோவை அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள ஹோட்டலில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
கோவை அரசு மருத்துவமனையில் உடுமலைப்பேட்டையை சேர்த்த திவ்யா என்பவரின் சகோதரர் கார்த்திகேயன் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் இன்று காலை திவ்யா கோவை அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள டேஸ்டி என்ற உணவகத்தில் அவருக்கும், தம்பிக்கும் ஆப்பம், சாம்பார் ஆகியவற்றை வாங்கி சென்றார்.
உடல் நலக்குறைவு ஏற்பட்ட தம்பிக்கு அதை சாப்பிட கொடுத்துள்ளார். சாப்பிட்ட பின்னர் மீதி இருந்த சாம்பாரில் பார்த்த போது அதில் எலிக்குஞ்சு ஒன்று இறந்த நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இறந்த எலி கிடந்த சாம்பாருடன் ஹோட்டல் உரிமையாளரிடம் வந்து முறையிட்ட போது, உரிய பதில் அளிக்காமல் எலி இருந்த பொட்டலத்தை வாங்கி வைத்துள்ளார்.
இதனையடுத்து கடைக்காரருடன் வாக்குவாதம் எற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சாம்பாரில் எலி கிடந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் உணவு பாதுகாப்பு உணவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் சோதனை மேற்கொண்டனர்.
சாம்பாரில் எலி கிடந்தது குறித்த புகார் வந்திருப்பதாகவும், விசாரணை நடத்தி வருவதாகவும் விசாரணைக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



















