ரஷ்யாவில் 52 நாட்கள் சிறை வைக்கப்பட்டு, இளைஞர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட 7 வயது சிறுவனை சிறப்பு பொலிசார், சினிமா பாணியில் மீட்டுள்ளனர்.
தலைநகர் மாஸ்கோவில் இருந்து சுமார் 185 மைல் தொலைவில் அமைந்துள்ள மகரிகா பகுதியில் இருந்தே சிறுவனை மீட்டுள்ளனர்.
இப்பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் ரகசிய சுரங்க அறையில் அவல நிலையில் இருந்த சிறுவனை சிறப்பு பொலிசார் மீட்டதுடன், குறித்த சம்பவத்தில் தொடர்புடைய 26 வயது இளைஞர் டிமித்ரி கோபிலோவ் என்பவரை கைது செய்துள்ளனர்.
செப்டம்பர் 28 ஆம் திகதி பாடசாலையில் இருந்து குடியிருப்புக்கு திரும்பிய 7 வயது சிறுவனையே டிமித்ரி கோபிலோவ் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளார்.
தொடர்ந்து தமது குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய சுரங்க அறையில், சிறுவனை சிறை வைத்து, சீரழித்துள்ளார்.
நாட்கள் நீண்ட சிறை வாழ்க்கையின் இடையே, இளைஞர் கோபிலோவ் சிறுவனை மூளைச்சலவை செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
சிறப்பு பொலிசார், குறித்த சுரங்க அறைக்குள் அதிரடியாக நுழைந்த போது, சிறுவன் வாய்விட்டு சிரித்ததாகவும், பின்னர் கண்ணீர் விட்டு கதறியதாகவும் கூறப்படுகிறது.
சிறுவன் மாயமான பின்னர் பல நாட்கள் கடந்த நிலையிலும், பொலிசாரால் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்க முடியாமல் திணறியுள்ளனர்.
ஆனால், குறித்த இளைஞர் ரகசிய இணையம் வழியாக ஏனைய சிறார் ஈர்ப்பாளர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல், சிறப்பு பொலிசாரின் பார்வையில் சிக்கியதன் பின்னரே, இந்த வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சிறுவனுடன் தமக்கு ஏற்பட்ட அனுபவம் தொடர்பில் ரகசிய இணைய பக்கத்தில் சிறார் ஈர்ப்பாளர்களுடன் இளைஞர் கோபிலோவ் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மட்டுமின்றி, காணொளி உரையாடல்களில் சிறுவனையும் உட்படுத்தியுள்ளார். இதனிடையே, சிறார் ஈர்ப்பாளர்களின் நடவடிக்கைகளை ரகசிய இணைய பக்கங்களில் கண்காணித்து வந்த அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் சிறப்பு விசாரணை அதிகாரிகள், இந்த விவகாரத்தை ரஷ்ய பொலிசாருடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இது, குற்றவாளியை அடையாளம் காண்பதற்கும், சிறுவனை சிறை வைத்திருக்கும் இடத்தை தெரிந்து கொள்வதற்கும் உதவியாக அமைந்துள்ளது.
தொடர்ந்து பொலிசார், ராணுவம், தன்னார்வலர்கள் இணைந்த ஒரு குழு, இளைஞர் கோபிலோவின் குடியிருப்புக்குள் அதிரடியாக நுழைந்து சிறுவனை மீட்டுள்ளனர்.
இரும்பு கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்தே சிறப்பு பொலிசார் சுரங்க அறைக்குள் நுழைந்துள்ளனர். மேலும் படுக்கை ஒன்றும், சத்தம் வெளியே கேட்காத வகையிலான கருவிகளும் அந்த அறையில் பொருத்தப்பட்டிருந்தது.
சுரங்க அறையில் சிறுவனை சிறை வைத்திருந்தாலும், கைதான கோபிலோவ் குடியிருப்பின் மேல் மாடியில் குடியிருந்துள்ளார்.
மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், பெற்றோரை வரவழைத்து சிறுவனை ஒப்படைத்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிறுவன் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதால் உளவியல் சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.