இலங்கையில் 1971இல் உயிரிழந்தவர்களை, அதேபோல் 1989இல் உயிரிழந்தவர்களை ஜே.வி.பியினர் தெற்கில் நினைவு கூருகின்ற நிலையில், வடக்கு, கிழக்கில் உயிரிழந்த தமிழ்ப் போராளிகளையும், தமிழ் பொது மக்களையும் நினைவுகூர முடியாது என கோட்டாபய அரசு தடை போடுகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இப்படி ஒவ்வொரு மாகாணங்களுக்கும், வெவ்வேறு சட்டங்களைப் போடும் இதே அரசுதான் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்று கோமாளித்தனமாகச் சொல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்களத் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு மனோ கணேசன் எம்.பி. வழங்கியுள்ள நேர்காணலில்,
தொகுப்பாளர்:- நீங்கள் அண்மையில் தமிழ் ஊடகமொன்றுக்கு, ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பது கேலிக்குரிய விடயமாக இருக்கின்றது எனக் கூறியிருந்தீர்கள். அதாவது ஆயுதம் ஏந்தியவர்களை நினைவுகூருவதை நியாயப்படுத்த முயல்வது போலவே அது தோன்றியது. என்ன கதை இது?
மனோ கணேசன்: – நான் எனது Twitter மற்றும் Facebook ஊடாக இந்த கருத்தினை பதிவேற்றியிருந்தேன். அது தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்களிலும் பிரசுரிக்கப்படுகின்றது. நான் சொல்ல முயல்வது இதுதான்.
அதாவது இந்த நாட்டில் போரால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் பிரச்சினை, வடக்குக்கு தெற்குக்கும் இடையில் இருந்து வருகின்றது. இது ஒரு புதிய பிரச்சினையல்ல.
பாருங்கள், பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? தேர்தல்களின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசுக்கு எதிராக ஆயுதங்கள் ஏந்திப் போராட்டங்களை மேற்கொள்பவர்கள் தான் பயங்கரவாதிகள் எனக் கூறப்படுகிறார்கள்.
இது பற்றிய எளிமையான விளக்கம் அவ்வளவுதான். நாம் இப்படிப் பார்க்கின்ற போது, 1971, 1989ஆம் ஆண்டுகளில் ஆயுதம் ஏந்திய ஜே.வி.பியினர் பயங்கரவாதிகள். தமிழீழ விடுதலைப்புலிகளும் பயங்கரவாதிகள்.
இன்று அமைச்சுப் பதவி வகிக்கும் டக்ளஸ் தேவானந்தவின் ஈ.பி.டி.பி. மற்றும் ரெலோ, புளொட் ஆகிய அமைப்புகளும் பயங்கரவாத அமைப்புகளாகத்தான் செயற்பட்டுள்ளன.
ஆனால், இப்போதுள்ள கேள்வி, ஜே.வி.பி. இன்று தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. அதன் தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்னும் தடையுள்ளது. அதனால், வடக்கில் போரின்போது உயிரிழந்த போராளிகளாக இருக்கட்டும், பொதுமக்களாக இருக்கட்டும் அவர்களை, தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி நினைவு கூருவது சட்ட விரோதமானது என அரசாக இருக்கட்டும் அல்லது தெற்கில் யாராவது கூறினால் அதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
ஆனால், இதனை ஒரு காரணமாகக் கொண்டு உயிரிழந்தவர்களை நினைவு கூருவதை நிறுத்துவது என்பது அநீதியானது, பிழையானது, மனிதாபிமானமற்றது என நான் நினைக்கிறேன்.
தொகுப்பாளர்:- ஆனால், பிரபல நாடுகளில், அதாவது போர் நடைபெறுகின்ற நாடுகளில், உதாரணமாக தலிபான் இயக்கங்களை நினைவு கூருவதற்கு இடமளிப்பதில்லையே?
மனோ கணேசன்: (உடனே இடைமறித்து) அப்போது எவ்வாறு தெற்கில் ஜே.வி.பி. நினைவு கூருகின்றது?
தொகுப்பாளர்:- ஜே.வி.பிக்கு நினைவுகூர இடமளிக்கப்படுகின்றதா?
மனோ கணேசன்:- வருடந்தோறும் நினைவு கூருகின்றனர். ஏன் இல்லை? உங்களுக்குத் தெரியாதா? 1971இல் உயிரிழந்தவர்களை ஏப்ரல் மாதத்தில் ‘விரூ தின’ என்றும், அதே போல் 1989இல் உயிரிழந்தவர்களை நவம்பர் மாதத்தில் ‘இல் தின’ எனவும், ஜே.வி.பியினர் நினைவு கூருகின்றனர்.
தொகுப்பாளர்:- ஆம். ஆம். ஜே.வி.பியினர் மாவீரர்களை நினைவு கூருகின்றனர் தாம்.
மனோ கணேசன்:- இவர்கள் பிரசித்தமாக நாட்டில், கொழும்பு தலைநகரில், மேடை அமைத்து, சுவரொட்டிகளை ஓட்டி, பாதயாத்திரைகளை நடத்தி, ரோஹன விஜயவீர மற்றும் உபதிஸ்ச கமநாயக்க ஆகியோரை நினைவு கூருகின்றனர்.
தொகுப்பாளர்:- அப்போது நீங்கள் அந்த அந்தஸ்துக்குத் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும் வைக்கின்றீர்களா?
மனோ கணேசன்:- நான் ஜே.வி.பியின் ஆயுதக் கொள்கையை ஏற்றுக்கொள்பவன் அல்லன். நான் இந்த நாட்டின் பிரச்சினைகளை ஒருபோதும் ஆயுதம் ஏந்தி தீர்க்க முடியும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவன் அல்லன்.
பேச்சுவார்த்தை, கலந்துரையாடல், வேறு வழிமுறைகள் இல்லை. அப்போது நான் எப்படி ஜே.வி.பியின் ஆயுதக் கொள்கையை ஏற்றுக்கொள்வது?
நான் எப்படி வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுதக் கொள்கையை ஏற்றுக்கொள்வது? முடியாதுதானே!
ஆயுதப் போராட்டம் வேண்டாம்! சண்டையிட வேண்டாம்! அடித்துக் கொள்ள வேண்டாம்! சாகடிக்க வேண்டாம்!அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றாலும், உயிரிழந்தவர்களை நினைவுகூர வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
ஆனால், அது எங்களுக்கு இல்லை. அது ஜே.வி.பிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒன்றே ஒன்று, ஜே.வி.பியின் தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது.
ஆனால், சிலர், ஜே.வி.பியினர் பயங்கரவாதிகள் அல்லர், அவர்கள் கலகக்காரர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று கூற முயல்கின்றனர்.அதை நான் ஏற்க மாட்டேன்.
இதைத் தங்கள் தேவைகளுக்காகச் சொல்கின்றனர். அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதில் பாரபட்சம் உள்ளது.
தொகுப்பாளர்:- அப்படியென்றால் இரு சாராரினதும் நோக்குகள் ஒன்றா?
மனோ கணேசன்:- ஒன்றாகும்! ஒன்றாகும்!ஆயுதப் போராட்டம் என்பது, ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டி ஆகும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நோக்கம் வடக்கு, கிழக்கில் வேறொறு நாட்டை உருவாக்குவது என்று சொல்கின்றார்கள். 1971, 1989களில் தெற்கில் சில பிரதேசங்களை ஜே.வி.பியினர் பிடித்து தம்வசம் வைத்திருந்தனர். உங்களுக்குத் தெரியுமாயிருக்க வேண்டும்.
அப்பிரதேசங்களை அவர்கள் ஆட்சி செய்தார்கள். அந்தக் கிராமங்களில் அவர்களது நீதிமன்றங்களை நடத்தினர். தெரியும் தானே!
தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் அமைப்புகள், வடக்கையும் கிழக்கைமட்டும் ஆக்கிரமிக்க முயன்றனர்.
ஆனால், ஜே.வி.பியினர் முழு நாட்டையும் பிடிக்க முற்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஆயுதம் ஏந்திய ஏனைய தமிழ் அமைப்புகளுக்கும் இடையிலும், ஜே.வி.பிக்கு இடையிலும் கொள்கை வித்தியாசங்கள் உள்ளன.
அதை நானில்லை என்று சொல்லவில்லை. ஆனால், அதைக் காரணமாகக் கொண்டு, தமிழ் அமைப்புகள் பயங்கரவாதிகள்.
ஜே.வி.பியினர் கெளதம புத்தர்கள் என்று சொல்ல முயல்வதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன். எல்லோருமே ஆயுதங்களை ஏந்தித்தான் போராட்டங்களைச் செய்தனர்.
அதிலிருந்துதான் என் கொள்கை நிலைப்பாட்டை நான் ஆரம்பிக்கிறேன். ஆயுத அமைப்புகளின் போக்கினை நான் ஏற்றுக்கொள்வதும் இல்லை, அதைச் சரியென நான் சொல்வதும் இல்லை. அங்கீகரிப்பதும் இல்லை.
ஆனால், அவர்கள் உயிரிழந்தனர். அதனால் அவர்களின் தாய், தந்தை, மனைவிமார்களுக்கு. பிள்ளைகளுக்கு தமது பிள்ளைகளை, கணவன்மார்களை, பெரியோரை, உறவினர்களை, நினைவுகூர இடமளிக்கப்பட வேண்டும்.
இது இவ்வுலகில் யாருக்கும் இருக்க வேண்டிய உரிமை. அதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தடை செய்யப்பட இயக்கம் என்பதால் அந்தத்தடை என்றாவது ஒருநாள் நீக்கப்பட முடியும்.
அதுவரை அந்த அமைப்பின் பெயர் குறிப்பிடாமல், அவர்களது கொள்கைகளைப் பற்றிப் பேசாமல், இறந்தோரை நினைவுகூர அவர்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.


















