ஜப்பானியச் சிறுமியை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலாபம் – மாரவில – மூதுகொட்டுவ பகுதியிலுள்ள இளைஞனின் உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த நிலையிலேயே அவர்கள் இருவரும் நேற்று கைதாகியுள்ளனர்.
மாரவில – மூதுகொட்டுவ பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே, சிறுமியை நாட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணைகளில், குறித்த சிறுமி 4 மாத கர்ப்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சந்தேகத்திற்கிடமான வீடொன்றிற்கு பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளது.
இதன்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், வீட்டின் கூரையின் ஊடாக வீட்டிற்குள் பொலிஸார் இறங்கி , குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
சிலாபம் – மாரவில – மூதுகொட்டுவ பகுதியைச் சேர்ந்த இளைஞன், 4 வருடங்களுக்கு முன்னர் தனது உயர் கல்வியை தொடர்வதற்காக ஜப்பான் சென்றுள்ளார்.
இதன்போது அவர் தனது கல்வி நடவடிக்கைகளுக்காக , ஜப்பானிலுள்ள செல்வந்த வர்த்தகர் ஒருவரின் வீட்டில் தற்காலிகமாக பணிப்புரிந்துள்ளார்.
வர்த்தகர், வர்த்தகரின் மனைவி மற்றும் அவரது 15 வயதான மகள் ஆகியோரே அந்த வீட்டில் வாழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை இளைஞனுக்கும், 15 வயதான ஜப்பான் சிறுமிக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த இளைஞன் தனது காதலியை இரகசியமாக இலங்கை அழைத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு ஜப்பானிலுள்ள வீட்டில் தனது மகளை காணாத பெற்றோர், இந்த விடயம் தொடர்பில் அந்த நாட்டு பொலிஸாரின் ஊடாக ஜப்பானுக்கான இலங்கை தூதரகத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஜப்பானுக்கான இலங்கை தூதரக அதிகாரிகள் மற்றும் கட்டுநாயக்க பொலிஸார் இணைந்து, குறித்த இளைஞன் மற்றும் ஜப்பான் சிறுமி ஆகியோரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.
மேலும் குறித்த சிறுமியின் பெற்றோர் இலங்கைக்கு வருகைத் தரும் வரை, சிறுமியை அதிகாரிகள் தமது பொறுப்பில் வைத்திருக்கும் நோக்குடன், காதலனின் வீட்டிற்கு அருகிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்க வைத்துள்ளனர்.
அத்துடன் சிறுமியின் பாதுகாப்பிற்காக, காதலனின் தங்கை, குறித்த சிறுமியுடன் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், ஜப்பான் சிறுமியின் பெற்றோர் நாட்டிற்கு வருகைத் தரவுள்ளதாக அறிய கிடைத்ததையடுத்து, தனது காதலியை அழைத்து கொண்டு, குறித்த இளைஞன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அதன்பின்னர் சுமார் 7 மாத காலமாக குறித்த இருவரையும் கண்டுபிடிக்க முடியாது, விசாரணைகளை நடத்திய நிலையிலேயே தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இருவரையும் தப்பிச் செல்ல ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ், குறித்த இளைஞனின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
, குறித்த இருவரும் தப்பிச் செல்ல ஒத்துழைப்பு வழங்கிய வாகன சாரதியொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் கொச்சிக்கடை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை , சிறுமியின் தாய் இலங்கைக்கு வருகைத் தந்ததுடன், அவரது மகளை கண்டுபிடிக்க முடியாமையினால், அவர் மீண்டும் நாட்டிற்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.