அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைக்கும் போது தொடர்ந்தும் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரம் அழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி விடுத்துள்ளார்.
அரச சேவையின் அவசியத்திற்கமைய நிறுவனங்களின் பிரதானிகளினால் ஒரு ஊழியரை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அழைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அந்த நடவடிக்கைகள் சுகாதார பாதுகாப்பு முறைக்கமைய மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
கொரோனா பரவலுக்கு மத்தியில் நிறுவனங்களின் பிரதானிகளினால் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகள் உள்ளடக்கி ஜனாதிபதி செயலகத்தினால் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி மற்றும் 2020ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதிகளில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளின் ஆலோசனைக்கமைய மீள் அறிவிப்பு வரை செயற்படுமாறு செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.