இலங்கை கிரிக்கெட் அணியில் இதுவரை வடக்கு கிழக்கை சேர்ந்த வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படாமைக்கு அரசியல் காரணங்கள் கிடையாது. போதிய திறமையின்மைதான் காரணம். இப்போது அந்த நிலைமை மாற ஆரம்பித்திருக்கிறது என தெரிவித்துள்ளார் முன்னாள் சுழற்பந்து நட்சத்திரம் முத்தையா முரளிதரன்.
தனியார் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்தபோது இதனை கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக தமிழர்களே உள்ளனர். யுத்தம் காரணமாக 30 வருடங்களாக அங்கு கிரிக்கெட் விளையாடப்படவில்லை. யுத்தத்திற்கு முதல் பலர் விளையாடியிருப்பார்கள். ஆனால் அப்போது இலங்கை டெஸ்ட் அந்தஸ்தை பெற்றிருக்காததால் அவர்களிற்கு வாய்ப்பு கிடைக்காமலிருந்திருக்கலாம்.
30 வருடங்களின் பின் விளையாடும்போது அவர்களின் திறமை கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. பயிற்சி, வசதிகள் அங்கு குறைவாக இருந்தது. வீரர்கள் திறமையை காட்டினாலும், நாட்டின் தெற்கு, மத்திய பகுதி வீரர்களை விட குறைவாக இருந்தமையினாலேயே அவர்களிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
எப்போதும் இந்த நிலைமை இருக்காது. இப்போது அந்த பகுதிகளில் வசதிகள் வழங்கப்படுகிறது. இப்போது எல்.பி.எல் தொடரில் யாழ்ப்பாண அணியில் சில வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.