கொழும்பு புறநகர் பகுதியான மொரட்டுவை – எகடவொயன என்ற இடத்தில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் படுகாயமடைந்த இளம் தாய் ஒருவரின் கர்ப்பம் சிதைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் ஒரு வயது மற்றும் 7 வயதுடைய இரு பெண் பிள்ளைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
வீதிக்கடவையை கடக்க முற்பட்ட போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் குறித்த தாய் உள்ளிட்ட குழந்தைகள் மீது மோதியுள்ளது.
இதில் ஒரு வயது குழந்தை 10 மீற்றர் வரையில் தூக்கி வீசப்பட்டதாகவும், 7 வயதான சிறுமி 20 மீற்றர் தூரம் வரையில் தூக்கி வீசப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், படுகாயமடைந்த இளம் தாய் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நான்கு மாத கர்ப்பமாக இருந்த அவரின் கருவும் சிதைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்த வந்த 20 வயதான இளைஞர் பொலிஸாரின் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.



















