முன்னாள் பிரமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமாக உள்ள முக்கிய பிரமுகர்கள் சிலர், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து நாளை மறுதினம் விசேட சந்திப்புக்களும் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் பாட்டளி சம்பிக்க ரணவக்க, முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவதற்கான இணக்கத்தை வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்வரும் 9 ஆம் திகதி கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது கட்சி யாப்பு தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. கட்சி யாப்பை கடந்த 30 ஆம் திகதி வெளியிடுவதற்கே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், சம்பிக்க, நவீன் போன்றவர்களின் வருகை தொடர்பில் வெளியான சமிஞ்ஞைகளையடுத்து அது பிற்போடப்பட்டது.
சம்பிக்க ரணவக்க, நவீன் திஸாநாயக்க ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கத்துவம் பெறும் பட்சத்தில் அவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படவுள்ளன என்றும் ஐக்கிய மக்கள் சக்தி தகவல்கள் கூறுகின்றன. குறித்த உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முக்கிய பதவிகளை வகித்தவர்கள் என்பதுடன் குறிப்பாக நவீன் திஸாநாயக்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிகூட வழங்க பேச்சுக்களும் இடம்பெற்றிருந்தன.
எனினும் அதில் ஏற்பட்ட சந்தேகங்கள், கட்சிக்குள் பதவிகள் வழங்குவதில் ஏற்பட்ட குழப்பநிலை என்பன இருந்தமையும் நவீன் திஸாநாயக்கவின் இந்தத் தீர்மானத்திற்கு காரணமாக அமையலாம் என்றும் கூறப்படுகின்றது. அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இவர்கள் பிரிந்தால் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாரிய இழப்பாக அமையும் என்பதோடு அவர் தனிமையாவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.



















