800 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பாண்டில் கிறிஸ்மஸ் நட்சத்திரம் தெரிய வாய்ப்பிருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரிய குடும்பத்தின் மிகப் பெரிய இரண்டு கிரகங்கள் வியாழன் மற்றும் சனியை பூமியிலிருந்து பார்க்கையில், இந்த இரண்டு கிரகங்களும் அருகருகே வரும்போது பெரிய நட்சத்திரத்தைப் போல ஒளிரும். இந்த வெளிச்சமே ’கிறிஸ்துமஸ் நட்சத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு வரும் டிசம்பர் 21ஆம் திகதி ஏற்பட உள்ளதாக தெரிவித்துள்ள வானியல் ஆய்வாளர்கள், அன்றைய நாள் இந்த வருடத்தின் நீண்ட இரவாக இருக்கும் என்று கணித்துள்ளனர்.
வியாழன் மற்றும் சனி கோள்களின் சந்திப்பு ஒவ்வொரு 20 வருடத்துக்கு ஒருமுறை நிகழும் என்றாலும் கிறிஸ்மஸ் நட்சத்திரம் 800 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தெரியும். கடைசியாக கிறிஸ்மஸ் நட்சத்திரம் 1226 ஆம் ஆண்டு தோன்றியது. வியாழன் கிரகமும் சனி கிரகமும் சந்திக்கும் நிகழ்வு 1623 ஆண்டிலிருந்து கவனிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறுகையில், ”வியாழன் மற்றும் சனி கோள்களுக்கு இடையே மில்லியன் மைல் கணக்கில் இடைவெளி உள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் இரண்டு பெரிய கோள்களும் பூமியின் பார்வையில் அருகருகே தோன்றுவது அரிய நிகழ்வு தான்.
இந்த கிறிஸ்மஸ் நட்சத்திரம் வரும் 20 ஆம் திகதி சூரிய மறைவுக்குப் பின் தோன்றி 22 ஆம் திகதி வரை தெரியும். ஆனால், 21ஆம் திகதி இரவு தான் மிக தெளிவாக, பிரகாசமாக தெரியும். மனிதர்களின் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே தெரியும் கிறிஸ்மஸ் நட்சத்திரத்தை டெலஸ்கோப் மற்றும் பைனாகுலர் உதவியுடன் வானிலை சாதகமாக இருந்தால் உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளது.