கம்பளை புப்புரஸ்ச ஸ்டெலன்பேர்க் கந்தலா மேல் பிரிவு தோட்டத்தில் நேற்று முன்தினம் தனது தாயாரின் மரணச் சடங்கில் கலந்து கொண்ட பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கம்பளையை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
கொழும்பு களனி பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்த இந்த பெண், அங்கு கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அவருக்கு பிசிஆர் சோதனையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தாயார் இறந்த செய்தி கேட்டதும், சுகாதார பிரிவினருக்கு அறிவிக்காமல் கம்பளைக்கு புறப்பட்டுள்ளார்.
தனது கணவருடன், வாடகை முச்சக்கர வண்டியில் கம்பளைக்கு வந்தார். அவரும், கணவரும், சாரதியும் பயணித்துள்ளனர்.
தாயாரின் சடலம் நேற்று காலை 10 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டபோது அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வந்தது.
மரணச்சடங்கில் மூன்றிற்கும் அதிகமான தோட்ட பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மரணச் சடங்கில் இவருடன் தொடர்புபட்டவர்களின் விவரங்களை பொலிசார், சுகாதாரப் பிரிவினர் திரட்டி வருகின்றனர்.
இதேவேளை, இந்த தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் நேற்று வியாழக்கிழமை தொழிலுக்கு செல்லவில்லை. தோட்டப் பகுதியை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை. இதனையடுத்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
தொற்றுடன் அடையாளங் காணப்பட்ட பெண், புஸல்லாவ நகரில் உள்ள பல வர்த்தக நிலையங்களுக்கும் சென்றுள்ளார். அது தொடர்பான விபரங்களை திரட்ட சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


















