அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து, அடுத்த ஆட்சியும் நமதே என கூறி வரும் நிலையில், அவரது மனைவி மெலனியா வெள்ளை மாளிகை வாழ்க்கை போதும் என்ற மன நிலைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவாகியுள்ளார். அவரது பதவியேற்பு விழாவானது எதிர்வரும் ஜனவரி 20 அன்று நடைபெற உள்ளது.
ஆனால் ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், உச்சநீதிமன்றத்திற்கு துணிவிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார்.
மட்டுமின்றி ஆட்சி மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், தோல்வியை ஒப்புக்கொள்ள தாம் தயாரல்ல எனவும் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார்.
ஆனால் டிரம்பின் மனைவியான மெலனியா இதற்கு நேர்மாறாக, வெள்ளை மாளிகையில் இருந்து கிளம்ப ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி தமது ஒரே ஒரு மகனின் கல்வி தொடர்பிலும் மெலனியா முக்கிய முடிவெடுத்துள்ளார் என்றே கூறப்படுகிறது.
மேலும், வெள்ளை மாளிகையில் தாங்கள் இதுவரை பயன்படுத்தி வந்த பொருட்களில் எவை எவை நியூயார்க்கில் உள்ள டிரம்ப் மாளிகைக்கும், எவை தாம் இனி தங்கவிருக்கும் புளோரிடா மாகாணத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டும் எனபது தொடர்பில் விவாதிக்கப்பட்டு, மெலனியா முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மெலனியா டிரம்புக்கு வெள்ளை மாளிகை வாழ்க்கை சுத்தமாக பிடிக்கவில்லை என கூறப்படும் நிலையில், அவரது விருப்பத்திற்கு எதிராக டொனால்டு டிரம்ப் 2024 ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கினால், சில வேளை அது குடும்ப வாழ்க்கையில் டிரம்புக்கு சிக்கலாக முடியும் எனவும் அரசியல் நோக்கர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.




















