கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் நபர்களை அடக்கம் செய்வதா அல்லது தகனம் செய்வதா என்ற கலந்துரையாடல் உண்மையில் அவசியமற்றது என தென்னிலங்கையின் பிரதான சங்க நாயக்கர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய போதிராஜா தர்ம நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் அனைத்து இடங்களிலும் இன, மத, குல பேதங்களை அடிப்படையாக கொண்டு பரவவில்லை. குறிப்பிட்ட மதத்தினருக்கு இந்த நோய் பரவாது என்று கூற முடியாது. நாம் அனைவரும் பொதுவாக இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளோம்.
இதனால், இந்த சந்தர்ப்பத்தில் ஆட்சியாளர்கள் மதத்தை அடிப்படையாக கொண்டு தீர்மானங்களை எடுக்கக் கூடாது. வகுப்பினரை அடிப்படையாக கொண்டு தீர்மானங்களை எடுக்கக்கூடாது. அரசியல் அதிகாரம் அல்லது அரசியலை முன்னெடுப்பதற்கான அடிப்படையை கொண்டு தீர்மானங்களை எடுக்கக் கூடாது.
அனைத்து மனித இனத்திற்கும் நன்மை ஏற்படும் வகையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும். இந்த நேரத்தில் இது குறித்தே சிந்தித்து பார்க்க வேண்டும் எனவும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.


















