அரசினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டமொன்றின் ஆரம்ப விழாவில், அந்த திட்டம் யாரால் ஆரம்பிக்கப்பட்டதென்ற சில்லறை சண்டை ஏற்பட்ட சுவாரஸ்யம் நிகழ்ந்தேறியுள்ளது. கரவெட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இடையாணன் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
மத்திய அரசின் நிதி திட்டத்தின் கீழ் மாவட்ட செயலகத்தின் ஊடாக சுயதொழில் முயற்சிக்கான கட்டடம் ஒன்றின் திறப்பு விழா நடைபெற்றது.
மத்திய அரசினால், மாவட்ட செயலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் திட்டங்களை தேர்தல் காலத்தில், தேர்தல் விதிகளை மீறி, தன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டதாக அங்கஜன் உரிமைகோரிய சம்பவங்கள் நடைபெற்றிருந்தன.
இந்த நிகழ்வில் அங்கஜனின் அப்பா விளக்கேற்றுவார் என, நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கு ஈ.பி.டி.பி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். “இங்கு என்ன குடும்பமா நடத்துகிறீர்கள்? அப்பா விளக்கேற்றுவார். அம்மாவையும் கூட்டி வந்து மாலை அணிவியுங்கள். மாமாவை கூட்டி வந்து தலைமை வகிக்க வையுங்கள். இது மத்திய அரசின் நிதி. டக்ளஸ் தேவாந்தாதான் இந்த திட்டம் வர காரணமானவ்“ என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
“சப்ரிகம எங்களுடைய திட்டம். ஒருங்கிணைப்புகுழு தலைவரின் இணைப்பாளராகத்தான் அங்கிள் (அங்கஜனின் அப்பா) இங்கு வந்துள்ளார். அவர் அப்பாவாக வரவில்லை. நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை, நாங்கள் ஆரம்பிப்பதில் என்ன தவறு?“ என அங்கஜன் குழு எகிறியது.
“மத்திய அரசின் திட்டம் என சொல்லுங்கள். ஆனால் சப்ரிகம உங்களுடைய திட்டம் என பொய் சொல்லாதீர்கள். ஊரெல்லாம், சப்ரிகம உங்களுடைய திட்டம் என பொய் சொல்கிறீர்கள். எங்களிடமும் அந்த பொய்யை சொல்லாதீர்கள்“ என ஈ.பி.டி.பி தரப்பு பதிலடி கொடுத்தது.
இதற்குள் அங்கஜனின் அப்பா விளக்கேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தரப்பு, விளக்கேற்ற வைத்திருந்த தீப்பெட்டியை ஒளித்து விட்டதாக பரபரப்பு கிளம்பியது. இப்படி நீண்டநேர இழுபியின் பின்னரே நிகழ்வு ஆரம்பித்தது.
நிகழ்வு முடிந்த பின்னரும், யாருடைய ஒதுக்கீடு அந்த பணம் என்பதில் இருதரப்பும் இணக்கத்திற்கு வராமல் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தன.


















