யாழ்ப்பாணம் மருதனார்மடம் மரக்கறிச் சந்தை கொரோனா தொற்றாளர்கள் நேற்றையதினம் மாத்திரம் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் மருதனார்மடத்தில் சேவையில் ஈடுபடும் ஓட்டோ சாரதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மருதனார்மடத்தில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடுபவரும் ஓட்டோ சாரதியுமான உடுவிலைச் சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் சந்தை வியாபாரிகள் மற்றும் உறவினர்கள் என 408பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது.
இதில் அவருடன் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் க.சத்தியமூர்த்தி தெரிவித்திருந்த நிலையில், அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.





















