நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் பரவல் நிலைமைக்கு மத்தியில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் அறிவிக்கப்படும் என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலைமைகளின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தவோ அல்லது பிரதேசங்களை தனிமைப்படுத்தவோ எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என்றும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
குகுலே கங்கா பிரதேசத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு கூறிய இராணுவத்தளபதி மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாண்டு எம் அனைவருக்கும் எந்தவொரு பண்டிகையையும் கொண்டாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தமிழ் சிங்கள புத்தாண்டில் ஆரம்பித்து , வெசாக் உள்ளிட்ட எந்த பண்டிகையும் கொண்டாடப்படவில்லை.
உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொவிட் தொற்றிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாப்பதற்காக உற்சவங்களை சில கட்டுப்பாடுகளுடனேயே கொண்டாடப்பட்டன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் எதிர்வரும் வாரங்களில் நத்தார் பண்டிகை , வருட இறுதி , வருட பிறப்பு என்பவற்றை வழமை போன்று கொண்டாட எந்த வாய்ப்பும் இல்லை.
மக்களின் செயற்பாடுகளிலேயே கொவிட் கட்டுப்படுத்தல் தங்கியுள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு கொரோனா மத்தியில் சாத்தியமற்றது.
அறிவுள்ள இலங்கை மக்கள் இந்த நிலைமையை புரிந்து கொள்வார்கள். எனவே ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கவோ தனிமைப்படுத்தவோ எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை.
எனினும் எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் நாட்டில் கொவிட் நிலைமை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் என்றார்.


















