இலங்கையில் முதன்முறையாக ஒன்றரை வயது குழந்தைக்கு அதிக அளவு கதிரியக்க சிகிச்சையைப் பயன்படுத்தி புற்றுநோய் செல்களை அழித்த பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹுமரஸ் எலும்பு (முழங்கையில் உள்ள நீண்ட எலும்பின் பெயர் ஹுமரஸ்) வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சையை காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் உள்ள குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஜனத் லியானகே மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியரான கௌசல் கருணாரத்ன ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சிகிச்சை சுமார் எட்டரை மணி நேரம் இடம் பெற்றுள்ளது.
பெண் குழந்தை ஒன்று எவிங் சர்கோமா என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது. இது குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பாதிக்கும் மிகவும் அரிதான எலும்பு புற்றுநோயாகும்.
இதனையடுத்து அக்குழந்தைக்கு பல மாதங்களாக கீமோதெரபி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது.
எனினும் அந்த சிகிச்சை பலனளிக்காததால், வைத்தியர்கள் குழந்தையின் கையை வெட்டாமல் ஒரு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தனர்.
பொதுவாக,குறித்த வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, வைத்தியர்கள் அவயவங்களை வெட்ட பரிந்துரைக்கின்றனர் என வைத்தியர் ஜனத் லியானேஜ் தெரிவித்துள்ளார்.
எனினும் “அதிர்ஷ்டவசமாக, குறிப்பிடத்தக்க அறுவை சிகிச்சையுடன் போராடியபின், குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) கராப்பிட்டிய வைத்தியசாலை குழந்தை நல மருத்துவர்களான வைத்தியர் பிரதீப் மற்றும் வைத்தியர் தேசப்பிரிய ஆகியோரின் பராமரிப்பில் குணமடைந்து வருகிறது ” என வைத்தியர் ஜனத் லியானேஜ் குறிப்பிட்டார்.
மேலும் தற்பொழுது “அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தையின் கை விரல்கள் சரியாக இயங்குகின்றன. கையில் இரத்த ஓட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


















