தென்னை மரங்களை தறிப்பது மற்றும் தென்னங் காணிகளை துண்டாடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இனிமேல் தென்னைமரம் தறிப்பதற்கு அரசாங்கத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.
சிலாபம் பகுதியில் நடந்த நிகழ்வொன்றில் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு மக்களுக்கு தேவையயான அளவு தென்னை உற்பத்தி இடம்பெறுகின்ற நிலையிலும், தேங்காய்களை தொழிற்சாலைகளுக்கு வழங்குவதால் தேங்காய் விலை அதிகரித்து செல்கிறது. தேங்காய் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தாலும் அதனை ஓரளவே கட்டுப்படுத்த முடிகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வாக வெளிநாடுகளிலிருந்து சிறு அளவில் தேங்காயை கொள்வனவு செய்வது மற்றும் குளிரூட்டப்பட்ட தேங்காய் துருவலை பெற்றுக் கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்ட நிலையில் அதற்கான அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளது. தேங்காய் எண்ணெய் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான தேங்காய்களை பெற்றுக் கொள்ளும் வகையில் 2 தொழிற்சாலைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாம் தேங்காய் இறக்குமதிக்கான அனுமதியை விருப்பத்துடன் வழங்கவில்லை. என்றாலும், எல்லையின்றி அதிகரித்து செல்லும் வியை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவையாக உள்ளது என்றார்.