பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிப்பதாக ஐரோப்பிய நாடான நெதர்லாந்து அறிவித்துள்ளது.
லண்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக அறிவித்த பிரித்தானியா, அது மிக சுலபமாக வேகமாக பரவுவதாகவும், அதை கண்டறிவது கடினமாக இருப்பதாக தெரிவித்தது.
மேலும், தற்போது மற்ற பிராந்தியங்களிலிருந்து லண்டனை துண்டிக்கும் வகையில் புதிய நான்கு அடுக்கு கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளது.
புதிய கொரோனா வைரஸ் குறித்த பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் உலக சுகாதார அமைப்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், பிரித்தானியாவில் புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதின் எதிரொலியாக அந்நாட்டிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிப்பதாக நெதர்லாந்து அறிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி டிசம்பர் 20ம் தேதி காலை 6 மணி முதல் இந்த தடை அமுலுக்கு வரும் எனவும், ஜனவரி 1ம் தேதி வரை தொடரும் என அறிவித்துள்ளது.
பிற போக்குவரத்து முறைகள் குறித்து கூடுதல் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என நெதர்லாந்து கூறியுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து புதிய கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அடுத்த சில நாட்களில், நெதர்லாந்து மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆராயும் என்றும் கூறியுள்ளது.