திருகோணமலை வெருகல் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் கைதான ஆசிரியரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரை நேற்று முன்தினம் (19) மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வெருகல், கல்லடி கிராமத்தை சேர்ந்த பத்தாம் தரத்தில் கல்வி பயின்று வந்த மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக வெருகல் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரினால் பொலிஸ் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
இலங்கைத்துறை முகத்துவாரம், ஈச்சிலம்பற்றை சேர்ந்த 28 வயதான ஆசிரியர் ஒருவரை கைது செய்யப்பட்டார்.
இதேவேளை இந்த கைது விவகாரம் குறித்து வேறு விதமாகவும் கூறப்படுகிறது. கல்லடி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மத முரண்பாட்டின் வெளிப்பாடே இந்த விவகாரம் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
சைவம் மற்றும் கிறிஸ்தவ சமயிகளிற்கிடையில் அங்கு முரண்பாடு நிலவி வருகிறது. பாடசாலை மாணவியும், குடும்பத்தினரும் அண்மையில் சைவத்திலிருந்து மதம் மாறியதாகவும், அதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற முறுகல்களின் விளைவாக ஆசிரியர் மீது முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் ஆசிரியர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.




















