ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான பரந்துபட்ட கூட்டணியை உருவாக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட மேலும் பலர் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
தற்போது எதிர் தரப்பினர் பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைக்கவுள்ளதாக கூறிக் கொண்டிருக்கின்றனர். கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரானதாக அந்தக் கூட்டணி அமையும் என்று கூறுகிறார்கள். சம்பிக ரணவக்க, அநுரகுமார திஸாநாயக்க, சுமந்திரன், ரிஷாட் பதியுதீன், ரவுப் ஹக்கீம் உள்ளிட்டோரே இந்த கூட்டணியின் அங்கத்தவர்களாவர்.
கடந்த ஐந்தாண்டு காலமாக நாட்டில் பல்வேறு ஊழல் மோசடிகளில் ஒன்றாக ஈடுபட்டவர்களே தற்போதும் ஒன்றிணைந்துள்ளார்கள். இவர்கள் அடிப்படைவாதத்தினையும் பங்கரவாதத்தையும் தூண்டியவர்கள். இவர்களே சஜித் பிரேமதாசவுடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள்.
இவ்வாறானதொரு கூட்டணி உருவாக்கப்படுவது எமக்கும் மகிழ்ச்சியளிக்கிறது. சம்பிக ரணவக்க, சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர, சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்டோர் இந்த கூட்டணியின் தலைமைத்துவத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு கூட்டணியின் தலைமைத்துவதற்காக இவ்வாறு பலர் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.



















