திருகோணமலை, மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று 33 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை வரை நடத்தப்பட்ட துரித ஆன்டிஜென் பரிசோதனையில் இவர்கள் அடையாளம் காணப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்தார்.
ஜமாலியா பகுதியில் 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனையில் 4 மாணவர்கள் உட்பட 12 குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதேவேளை திருகோணமலை நகரில் உள்ள தீயணைப்பு படை வீரர்கள் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நிவ் மூர் லேனில் வசித்துவரும் தீயணைப்பு படை வீரரின் தாய் மற்றும் தந்தைக்கு தொற்று உறுதியானது. தொற்றிற்குள்ளான தந்தை கோயிலில் கடமையாற்றி வருபவர்.
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில 58, 53 வயதுடைய இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, 49 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட துரிய ஆன்டிஜென் பரிசோதனையில் 10 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இன்றும் ஜமாலியா, மூதூர் பகுதிகளில் துரித ஆன்டிஜென் சோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.



















