கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் இறுதிச்சடங்கு போன்ற ஒரு முக்கியமான விடயத்தில், நாட்டின் அனைத்து சமூகங்களுடனும் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களை தகனம் செய்யலாமா அல்லது அடக்கம் செய்யலாமா என்பதை தீர்மானிப்பது மக்களின் உரிமை என்றும், இந்த விடயத்தில் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னர் பௌத்த, இந்து மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்களுடன் அரசாங்கம் ஆலோசித்திருக்க வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் கூறினார்.
ஐ.தே.கவின் செயற்குழு கூட்டம் இன்று இடம்பெற்றது. இதில் உரையாற்றிய முன்னாள் பிரதமர் விக்ரமசிங்க, ஐ.தே.க எப்போதும் மத சமூகங்களிடையே ஒற்றுமையை வளர்த்து வருவதாகவும், எனவே பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் கலந்துரையாடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் கூறினார்.
மத நம்பிக்கையை கடைப்பிடிப்பது இலங்கை மக்களின் அடிப்படை உரிமை. எனவே அதிகாரிகள் சுகாதார பரிந்துரையை கடைபிடிக்கும் போது அரசாங்கம் இந்த விடயத்தை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த விடயத்தில் ஒரு தலைப்பட்சமாக செயல்பட வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
இதுபோன்ற முக்கியமான பிரச்சினைகளை அரசியல் மயமாக்க வேண்டாம் என்றும், தென் கொரியா, இந்தியா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் இந்த பிரச்சினையை உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுடன் எவ்வாறு கையாண்டன என்பதைக் கவனிக்கவும் வலியுறுத்தினார்.



















