வடக்கிலுள்ள தொழிற்சாலைகளுக்கு தெற்கிலிருப்பவர்கள் இனிமேல் வேலைக்கு அமர்த்தப்பட மாட்டார்களென கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைகள் அனைத்தையும் இந்த அரசு, அவரது மக்களுக்காக பெற்றுத்தர தயாரகவே இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்றுறையில் நேற்று இதை தெரிவித்துள்ளார். மேலும் உரையாற்றுகையில்,
இனிமேல் இங்குள்ள தொழிற்சாலைகளுக்கான தொழிலுக்கு தெற்கிலிருப்பவர்கள் அமர்த்தப்பட மாட்டார்கள் என்று உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது நீண்ட நாள் நண்பர். அவர் நல்ல இதயம் கொண்டவர். அவர் எப்போதும் தனது மக்களுக்காகவும் அந்த மக்களின் நலன்கருதியும் அரசுடன் இணைந்து பல திட்டங்களை வகுத்து பல்வேறு நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்ற ஒருவர்.
அதேவேளை அவர் இக்கட்டான எந்தச் சந்தர்ப்பத்திலும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எம்மை விட்டு அமைச்சுப் பதவிகளுக்காக அடுத்த அரசாங்கங்களின் பக்கம் தாவிச்சென்றது கிடையாது.
அந்தவகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக தமிழ் மக்களுக்கு இன்னும் பல அபிலாஷைகள் கிடைக்கும் என்றும் தெரிவித்த அமைச்சர், நாம் அனைவரும் இன மத பேதங்களின்றி இலங்கையர் என்ற எண்ணத்துடன் ஒற்றுமையாக பயணித்தால் எமது நாட்டை வலுவான தேசமாக கட்டியெழுப்ப முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.



















