சஜித் தரப்பினர் தமது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற தவறுகளை மறைத்துக்கொள்வதற்காக தற்போது உயிரற்ற சடலங்களைப் பயன்படுத்திக்கொள்ள முற்படுகின்றார்கள் என்று சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்த்தரப்பினர் பௌத்த, இந்து மற்றும் கத்தோலிக்க சமூகத்தினரின் உரிமைகளை உறுதிசெய்வதற்காக முன்னின்று செயற்பட்டதோ அல்லது ஆர்ப்பாட்டம் செய்ததோ இல்லை.
தெவனகல ரஜமகா விகாரை அமைந்துள்ள பகுதியில் பாரிய காணி அபகரிப்பொன்று இடம்பெறுகின்றது. அதேபோன்று பொத்துவில் முதுமகா விகாரை, கிரிந்த விகாரை, தீகவாபி போன்ற பகுதிகளுக்கு அவர்கள் சென்று பார்க்கவேண்டும்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு மற்றும் புராதன தொல்பொருள் சின்னங்கள் அழிக்கப்படல் தொடர்பில் அவர்கள் தேடிப்பார்க்க வேண்டும்.
ஆனால் ஒருபோதும் அவர்கள் அதனைச் செய்யமாட்டார்கள். அவர்களுடன் இருக்கின்ற முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனங்கள் நோகடிக்கப்பட்டுவிடும் என்பதால் அவர்கள் அங்கு சென்றுபார்க்கமாட்டார்கள்.
அவர்கள் இப்போது என்ன பேசினாலும், நல்லாட்சி அரசாங்கத்திலேயே நாட்டின் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. அவர்களுடைய ஆட்சியின் போது ஷானி அபேசேகர, நிஷாந்த கந்தப்பா (நிஷாந்த த சில்வா) போன்றோர் பொய்யான சாட்சியங்களை சோடித்து, சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திய போது அதுகுறித்து சஜித் பிரேமதாஸ தரப்பினர் ஏன் பேசவில்லை? என்றார்.