பிரித்தானியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட, 70 சதவீதம் வேகமாக தொற்றக்கூடிய புதிய வகை கோவிட் -19 வைரஸ் பல ஐரோப்பிய நாடுகளிலும், கனடா மற்றும் ஜப்பானிலும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
பிரித்தானியாவிலிருந்து வந்த மக்களுடன் தொடர்புடைய நோய்த்தொற்றுகள் ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, சுவீடன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பதிவாகியுள்ளன.
கனடாவின் ஒன்டாரியோவில் பாதிக்கப்பட்ட ஒரு தம்பதியினருக்கு பெரிய பயண வரலாறு அல்லது அதிக ஆபத்துள்ள தொடர்புகள் எதுவும் இல்லை என்றும், இருப்பினும் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
பெரும்பாலான குடியேறிய வெளிநாட்டினரை திங்கள்கிழமை முதல் ஒரு மாதத்திற்கு நாட்டிற்குள் நுழைய ஜப்பான் தடை விதிக்க உள்ளது. இதற்கிடையில், இங்கிலாந்தில் இருந்து வந்த 5 பயணிகளுக்கு தொற்று இருப்பது தெரியவந்ததற்குப் பிறகு, மேலும் 2 வழக்குகளை ஜப்பான் உறுதிப்படுத்தியுள்ளது, அவற்றில் ஒன்று உள்நாட்டில் பரவியதாகக் கூறப்படுகிறது.
ஸ்பெயினின் தலைநகரான மாட்ரிட்டில், 4 புதிய வகை கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் யாருக்கும் தீவிர உடல்நலக் குறைவோ அல்லது பெரிய அறிகுறிகளோ காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து 3 புதிய வகை வைரஸ் பாதிப்புகளை அடையாளம் கண்டுள்ளது, அவற்றில் இரண்டு வழக்குகள் தற்போது நாட்டில் உள்ள பிரிட்டிஷ் குடிமக்கள் என்று அறியப்படுகிறது. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் சுவிட்சர்லாந்து தனது ஸ்கை சரிவுகளை சுற்றுலாவுக்காக திறந்து வைத்திருந்தது, இதனால் கடந்த இரண்டு வாரங்களில் பிரித்தானியாவிலிருந்து இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்வீடனில், பிரித்தானியாவுக்கு பயணித்து திரும்பிய நபருக்கு கொரோனா புதிய வகை வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர் தற்போது சுய தினிமைப்படுத்தலில் உள்ளார்.