வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் வெளிவட்டங்களுக்குச் சென்று வருவதினாலேயே தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் வைத்திய நிபுணர்கள் வாரத்திற்கு ஒரு முறை கொழும்பு, கம்பஹா மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று வருவதாகவும் இவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மற்றும் என்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் சிற்றூழியர்களுக்கு மாத்திரம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த இரண்டு வைத்தியருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் மூதூர் வைத்தியசாலையில் குடும்பநல உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இவர்கள் வெளியிடங்களுக்குச் சென்று வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் வைத்திய நிபுணர்கள் வாரத்திற்கு ஒருமுறை வெளிவட்டங்களுக்குச் சென்று வருவதாகவும் இதேநேரம் நோயாளர்கள் அதிகளவில் தனியார் மருத்துவமனைகளிலும், வைத்தியசாலையிலும் வைத்திய நிபுணர்களிடம் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனால் திருகோணமலை மக்களுக்குத் தொற்று பரவும் அபாயம் அதிகளவில் ஏற்படக்கூடிய வாய்ப்புகளிருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே இக்காலப்பகுதியில் வெளி மாவட்டங்களுக்குச் சென்று வரும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் சமூக அக்கறையுடன் செயற்படவேண்டும் எனவும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்க வேண்டும் எனவும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் இன்று (27ம்) திகதி வரைக்கும் 120நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.