யாழ்ப்பாணம் – தென்மராட்சி- மீசாலை, தாட்டான்குளம் வீதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டிருந்த நிலையில் கூலிப்படையால் குறித்த நபர் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேக வெளியிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் கொடிகாமம், இராமாவில் பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை மோகனதாஸ் (47) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இனந்தெரியாத நபர்களால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
கூலித் தொழிலாளியான குறித்த குடும்பஸ்தர் துவிச்சக்கர வண்டியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போதே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதியில் சிசிரிவி கமராக்கள் இல்லை. இதனால் அந்த பகுதியை நன்கு அறிந்தவர்களின் பின்னணியில் கொலை நடந்திருக்க வேண்டுமென பொலிசார் நம்புகிறார்கள்.
உயிரிழந்தவரின் கையில் சிறிய காயமும், நெஞ்சில் ஆழமான காயமும் ஏற்பட்டிருந்தது.
இது குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் கூலிப்படையினரே இந்த கொலையை நடத்தியிருக்கலாமென நம்பப்படுகிறது.
இந்நிலையில் அந்த கூலிப்படையை இயக்கியது யார் என்ற மர்ம முடிச்சை அவிழ்க்க பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேவேளை, உயிரிழந்தவரின் குடும்ப உறவுகளிற்குள் இருந்த முரண்பாடுகள் குறித்தும் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேவேளை உயிரிழந்தவரின் மிக நெருக்கமான உறவினர் ஒருவர் ஐரோப்பிய நாடொன்றில் உள்ள நிலையில், அவரது திருமணத்திற்கு பெண் பார்த்து, திருமணத்தை ஒப்பேற்றியவர் என்றும் எனினும் பின்னர் அது தொடர்பான கசப்புணர்வுகள் காரணமாக, ஐரோப்பாவிலிருந்தவருக்கும், உயிரிழந்தவருக்கும் முரண்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து ஐரோப்பாவிலிருப்பவர், உயிரிழந்தவரின் குடும்ப தொலைபேசிக்கு அச்சுறுத்தும் குறுந்தகவல்களை அனுப்பியதாக உறவினர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்தும் பொலிஸார் ஆராய்ந்து வருகிறார்கள்.
எனினும், இதுவரை கொலையாளிகள் குறித்த எந்த தகவலையும் பொலிசார் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது



















