கரைச்சி பிரதேசசபையின் பிரியாவிடை நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றது. “ஊருக்குத்தான் உபதேசம். அரச அலுவலர்களிற்கல்ல“ என அண்மைக்காலமாக நடக்கும் சம்பவங்களின் பாணியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கரைச்சி பிரதேசசபையில் பணியாற்றும் 3 ஊழியர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்வதையடுத்து, அவர்களிற்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று (30) இரவு பரந்தனிலுள்ள ஹொட்டல் ஒன்றில் நடந்தது.
இது தொடர்பில் கரைச்சி பிரதேசசபை செயலாளரை நேற்று மாலை தமிழ் பக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது, சுகாதார கட்டுப்பாடுகளிற்கமைய பிரியாவிடை நிகழ்வு நடக்கும் என்றார்.
சுகாதார விதிமுறைகளின்படி, 50 பேருக்கு மேல் கூட முடியாது. அத்துடன், வருட இறுதி ஒன்றுகூடல்கள், நிகழவுகளை நடத்த வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நேற்று 115 பேர் நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டதை தமிழ்பக்கம் அறிந்தது.
சாதாரண பொதுமக்கள், அன்றாட உழைப்பாளிகளின் வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளை மோப்பம் பிடித்து, அரசாங்க அறிவித்தல்களை நடைமுறைப்படுத்துகிறோம என நடவடிக்கைகள் எடுக்கும் பொறுப்பான உத்தியோகத்தர்கள், இப்படியான நிகழ்வுகளை அனுமதிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பிரியாவிடை நிகழ்வுகள் இதுவரை அலுவலகத்திலேயே இடம்பெற்று வருவது வழக்கம். பெருந்தொற்று காலத்தில் மக்கள் கூடக்கூடாது என அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கி வரும் நிலையில், ஹொட்டலில் கூடி கரைச்சி பிரதேசசபை பிரியாவிடை நிகழ்வை நடத்தியுள்ளது.


















