மக்கள் ஆணைக்கும் எதிராக அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2021 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “புத்தாண்டின் விடியல், கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் நாம் எதிர்நோக்கும் சவால்களை சரியாகப் புரிந்துகொண்டு வாழ்க்கையைத் திட்டமிடுவதற்கும், உறுதியுடன் முன்னேறுவதற்கும் எம்மை ஊக்குவிக்கின்றது.
எனவே, மக்கள் ஆணைக்கும் எதிராக அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது. ஒரு நேர்மறையான மனப்பாங்குடனும், திடவுறுதி மற்றும் அர்ப்பணிப்புடனும் நாம் வரவேற்கிறோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நோய்த்தொற்றினை வெற்றிகொள்ள முழு உலகுடனும் இணைந்து நாமும் முன்னிலை வகித்துள்ளோம்.
கடுமையான சவால்கள் மற்றும் தடைகளுக்கு மத்தியிலும், தேசிய அபிலாஷைகளின் அடிப்படையில் நிலையான அபிவிருத்திக்கு அடித்தளம் அமைக்க எமக்கு முடிந்தது.
மக்களின் எதிர்பார்ப்புகளை அடைந்துகொள்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை புதிய ஆண்டில் மேலும் வலுப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளது.
மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தி மற்றும் தேசிய தனித்துவத்தைப் பாதுகாக்கும் எதிர்பார்ப்புடனேயே புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
நாட்டுக்கும் மக்கள் ஆணைக்கும் எதிராக அரசாங்கம் செயற்படாது என்ற அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை வீண்போக நாம் இடமளிக்கமாட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.