நீர்கொழும்பு தளுபத்தை, பல்லன்சேனை வீதியில் அமைந்துள்ள வேளாங்கன்னி தேவாலயத்தின் பாடகர் குழுவைச் சேர்ந்த இரண்டு அங்கத்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து தேவாலயத்தின் அருட் தந்தை, பாடகர் குழு அங்கத்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் அடங்கலாக 54 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பிரதான பொது சுகாதார பரிசோதகர் என்.கே.யு.கே.குணரத்ன தெரிவித்துள்ளார்.
தேவாலயத்தின் பாடகர் குழுவைச் சேர்ந்த இரண்டு அங்கத்தவர்களினதும் தந்தை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரது மகள்மார்கள் இருவருக்கும் மனைவிக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அவர்களுக்கும் கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்களுடன் பழகிய அருட் தந்தை , பாடகர் குழு அங்கத்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் அடங்கலாக 54 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் நீர்கொழும்பு நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் வசந்த சோலங்க தெரிவித்தார்.
இதேவேளை, நீர்கொழும்பு காமாச்சியோடை கடற்கரையோரத்தில் தற்காலிகமாக கூடாரம் அமைத்து வசித்து வரும் யாசகரான 45 வயது பெண் ஒருவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த யாசகர் குழுவைச் சேர்ந்த 17 பேர் கொண்ட குழுவினருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. நேற்று நீர்கொழும்பு பொது சுகாதார பிரிவில் 333 கொவிட் 19 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















