மாவனெல்ல பகுதியில் அமைந்துள்ள கற்பாறைகளை உடைக்கும் ஒரு இடத்தில் இருந்து வெடிப்பொருட்களை கொள்ளையிட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
மாவனெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிம்புல்ல ,முல்லிகொட பகுதியில் அமைந்துள்ள கற்பாறைகளை உடைக்கும் ஒரு இடத்தில் இருந்து சில வெடிபொருட்கள் கடந்த மாதம் 22 ஆம் திகதி கொள்ளையிடப்பட்டதாக, அந்த கல்குவாரியின் உரிமையாளர் கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி மாவனெல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மாவனெல்ல பொலிஸார்,கல்குவாரியின் ஊழியர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
அதற்கமைய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் விசாரணைகளுக்கமைய இன்று சனிக்கிழமை மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களினால் கொள்ளையிடப்பட்ட வெடிப் பொருட்கள் கண்டி – பேராதனை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.


















