பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் வயிற்று வலியுடனேயே அனுமதிக்கப்பட்டார். பின்னரே அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன என தெரிவித்துள்ளார் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்.
இன்று (5) யாழில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று வடமாகாணத்தில் 641 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் யாழ்பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 240 பேருக்கு செய்யப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 5பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 3 பேர் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவையும், 2 பேர் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவையும் சேர்ந்தவர்கள்.
மருதனார்மடம் கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களுடன் இவர்கள் தொடர்பில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களே நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனரர்.
இவர்களுடன் சேர்த்து மருதனார்மடம் கொத்தணியில் இதுவரை 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று 401 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் இருவர் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டனர். அதில் ஒருவர் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த புலோலி பகுதியைச் சேர்ந்தவர். இவர் வயிற்றுவலியுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சத்திர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு பின்னர் கொரோனா தொற்றுக்குரிய இருமல் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டவுடன் அவருக்கான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை விடுதியில் பணியாற்றிய மருத்துவ பணியாளர்கள் 7 பேர் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இவரோடு நேரடியாக தொடர்பில் இருந்த பலர் அந்த கிராமத்திலே அடையாளம் காணப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று முன்தினம் ஒரு கர்ப்பிணித் தாயொருவர் காய்ச்சல் இருமல் போன்ற அறிகுறிகளுடன் வந்திருந்தார். அவருக்கான அன்டின் பரிசோதனை முதலில் மேற்கொள்ளப்பட்டு தொற்று இனங்காணப்பட்டது. அதை மேலும் உறுதிப்படுத்துவதற்தாக நேற்றுக்காலை அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வேப்பங்குளம் பட்டாணிச்சூர் கிராமத்தை சேர்ந்தவர்.
இவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் பொறியியல் பீடத்தில் தொற்று உறுதியான மாணவனின் குடும்ப அங்கத்தவர்.
வவுனியா வேப்பங்குளம் பட்டாணிச்சூர், புளியங்குளம் கிராமத்தில் இவர்களுடன் தொடர்பில் இருந்த பல குடும்பங்கள் இன்று தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
வட மாகாணத்தில் டிசம்பர் மாதத்தில் 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் இன்று வரையான காலப்பகுதியில் வடக்கில் 11 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இனங்காணப்பட்டவர் மருதனார்மடம் பகுதியிலுள்ள வாகன சுத்திகரிப்பு நிலையத்துக்கு வந்ததாகவும், அங்கு வாகனம் சுத்திகரிக்கும் மட்டும் நான்கு மணித்தியாலங்கள் வரை காத்திருந்ததாகவும் கூறியிருக்கிறார். நாங்கள் அந்த கோணத்திலும், வேறு ஏதாவது வழியில் அவருக்கு தொற்று ஏற்பட்டு இருக்கின்றதா என்ற கோணத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.
மருதனார்மடம் பகுதியில் தொற்றாளர்கள் இனங் காணப்படுவது முடிவடையும் வரை அந்தப் பகுதியில் சில கட்டுப்பாடுகளை நாங்கள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றார்.